கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஏராளமான ஆணி மற்றும் கோலிக்குண்டுகள் சிதறி கிடந்ததால் இது சதி செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சனிக்கிழமை இரவு ஜமேஷா முபீனுடன் 4 பேர் இருந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. மேலும் ஜமேஷா முபீன் பயன்படுத்திய அந்த கார் யாருடையது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமான 7 நபர்களை அழைத்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து உக்கடம் கோட்டை மேடு ஜி.எம்.நகர் பகுதிகளைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் முகமது தல்கா, தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாப் கானின் மகன் ஆவார்.
சுமார் 9 பேரிடம் கைமாறிய கார் கடைசியாக முகமது தல்கா மூலம் ஜமேஷாவிடம் சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் கொடுத்த விவகாரத்தில் முகமது தல்கா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 4 பேரும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் முகாமிட்டிருந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.