ஒடிசா மாநிலத்தில், அரசுப் பள்ளியில் பயிலும் 1வகுப்பு மாணவனை, அதே பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் கோரபுட் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 1ஆம் வகுப்பு மாணவனுக்கும், அதே பள்ளியில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 4 மாணவர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகையை மறக்காத, 4 மாணவர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து 1 ஆம் வகுப்பு மாணவனின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி, சாப்பிட சென்ற மாணவன் பள்ளி விடுதிக்கு திரும்பவில்லை என்று, பள்ளி நிர்வாகம், மாணவனின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
மறுநாள், அந்த மாணவன், பள்ளிக்கு அருகில் இருந்த குப்பைத்தொட்டில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளான். உடனே, அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர், தனது குடும்பத்தினரிடம் பேசிய அச்சிறுவன், சாப்பிட வந்த தன்னை 4 மாணவர்கள் வெறித்தனமாக அடித்ததாகவும், தான் மயக்கம் அடைந்ததால் குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றாக கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், 4 மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் முகம் மற்றும் உடலில் 4 மாணவர்களின் நகங்கள் மற்றும் கைரேகைகள் இருப்பது கண்டிப்பிடிக்கப்பட்டது. பின்னர், அந்த மைனர் மாணவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.