சிறுமி திருமண வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள் நள்ளிரவில் போராட்டத்தை கைவிட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சிலர், பழங்கால நடைமுறைப்படி குழந்தைகளுக்கு பால்ய திருமணம் செய்து வைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் இதனை பொருட்படுத்தாமல் வழக்கமாக அவர்கள் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படி சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சித்தர் செயலாளர் ஹேமச்சந்திரன் தீட்சிதர் 15 வயது மகளை ராஜரத்தினம் தீட்சிதற்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். இது சம்பந்தமாக கடலூர் சமூக நலத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பொது தீட்சிதர் செயலாளர் ஹேமச்சந்திரா, தீட்சிதர் ராஜரத்தினம் தீட்சிதர், அவரது தந்தை வெங்கடேஸ்வர தீட்சிதர் ஆகிய மூன்று பேர் மீது குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதனை கண்டித்து சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிதம்பரத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை நடராஜர் கோயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை எச்சரித்தும் போராட்டத்தை கைவிடாமல் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளிலும் ஈடுபட்டார்கள். இதனை எடுத்து தீட்சிதர்கள் சிலர் குண்டுகட்டாக இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று மாலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்தது. குழந்தைகள் திருமணம் செய்யும் நடைமுறை சட்டத்துக்கு புறம்பானது என காவல்துறை எச்சரித்தும், கைது செய்தவர்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது. ஏற்கனவே நான்கு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வழக்கில் பல தீட்சிடர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போது மேலும் ஒரு சிறுமிக்கு திருமணம் செய்தது ஆதாரத்துடன் கிடைத்ததால் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினரின் கடும் கண்டிப்புகளை தொடர்ந்து, நள்ளிரவில் தீட்சிதர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.