காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது தாக்குதல்- இரும்புக்கரம் கொண்டு அடக்க நீதிமன்றம் உத்தரவு

காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது தாக்குதல்- இரும்புக்கரம் கொண்டு அடக்க நீதிமன்றம் உத்தரவு
காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது தாக்குதல்- இரும்புக்கரம் கொண்டு அடக்க நீதிமன்றம் உத்தரவு
Published on

காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள சென்னை மகளிர் நீதிமன்றம், இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மன்னார்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு, திருப்பூரை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். காதலிக்க மறுத்த அப்பெண், சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வந்த அரவிந்த்குமார், அப்பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதுடன், கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தினர் பதிவுசெய்த வழக்கை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் விசாரித்தார். காவல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி. ஆர்த்தி ஆஜராகி, அரவிந்த்குமாருக்கு எதிராக காவல்துறை சேகரித்த ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து வாதாடினார்.

பின்னர் நீதிபதி முகமது பாரூக் பிறப்பித்துள்ள தீர்ப்பில், அரவிந்த்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள்தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com