ஒரே நள்ளிரவில் 25 கடைகளில் பூட்டை உடைத்த 'பல சரக்கு' கொள்ளையர்கள்: கைதானது எப்படி?

ஒரே நள்ளிரவில் 25 கடைகளில் பூட்டை உடைத்த 'பல சரக்கு' கொள்ளையர்கள்: கைதானது எப்படி?
ஒரே நள்ளிரவில் 25 கடைகளில் பூட்டை உடைத்த 'பல சரக்கு' கொள்ளையர்கள்: கைதானது எப்படி?
Published on

ஒரே நள்ளிரவில் 25 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 'பல சரக்கு' கொள்ளையர்கள். போலீசிடம் சிக்கியது எப்படி? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள 8 கடைகளின் பூட்டை உடைத்து சூப்பர் மார்க்கெட், மளிகை கடை மற்றும் அரிசி கடை என தொடர்ச்சியாக கடந்த 24-ம் தேதி இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதையடுத்து கோடம்பாக்கம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க தி.நகர் காவல்துறை உதவி ஆணையர் பாரதிராஜா, கோடம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த 24-ம் தேதி மட்டும் 2 கொள்ளையர்கள், விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், புளியந்தோப்பு, எம்கேபி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 25 கடைகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் முகத்தை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது பூட்டை உடைத்து திருடும் பிரபல கொள்ளையன் இட்டா விஜி என்ற விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இட்டா விஜி பதுங்கி இருக்கலாம் என மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் போலீசார் தேடியபோது விஜி சிக்கவில்லை.

இதனால் கொள்ளையர்களை பிடிப்பது தனிப்படை போலீசாருக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் கொள்ளை நடந்த இடத்திற்கு அருகில், பைக் ஒன்று 3 நாட்களாக கிடப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பைக் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அது திருடப்பட்ட பைக் என்பதும் தெரியவந்தது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்காக இருக்கலாம் என 3 நாட்களாக தனிப்படை போலீசார் அந்த பைக்கை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது இன்று அதிகாலை 2 பேர் அந்த பைக்கை எடுக்க வந்தனர். உஷாரான தனிப்படை போலீசார் இட்டா என அழைத்தனர். அப்போது திரும்பி பார்த்து ஓட்டம் பிடித்தவர்களை போலீசார் துரத்திச் சென்று இட்டா விஜி உட்பட அவரது கூட்டாளியையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இட்டா விஜி மற்றும் அவரது கூட்டாளியான சூரிய பிரகாஷ் ஆகியோர் கடந்த 24 ஆம் தேதி இரவு பட்டினப்பாக்கத்தில் சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடின, ஒரேநாளில் 25 கடைகளில் கொள்ளையடித்துள்ளனர். . கொள்ளையடித்த பின்பு திருடிய இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றால் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கவாய்ப்பு என எண்ணி கடைகளுக்கு அருகே இருசக்கர வாகனத்தை விட்டுச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்பு சிறிது நாட்கள் கழித்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது வசமாக தனிப்படை போலீசிடம் சிக்கி கொண்டனர். இதனையடுத்து திருடிய பொருட்களை வைப்பதற்காகவே போரூரில் வாடகைக்கு வீடு எடுத்து திருடிய பொருட்களை அங்கு மறைத்து வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து மறைத்து வைத்திருந்த எல்.இ.டி டிவி, லேப்டாப், 10 செல்போன்கள், வெள்ளி பொருட்கள் என சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இட்டா விஜி மீது வளசரவாக்கம், புளியந்தோப்பு, அத்திபட்டு, கோட்டூர்புரம் என பல காவல் நிலையங்களில் கொள்ளை, திருட்டு, வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கோடம்பாக்கம் போலீசார் கைது செய்த இட்டா விஜி மற்றும் சூரியபிரகாஷ் ஆகியோரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com