நிலத்தை கிரையம் செய்து தருவதாக பல பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று ஏமாற்றிய இருவரை தாம்பரம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராஜவேல் மற்றும் நமச்சிவாயம் (எ) சிவா ஆகிய இருவரும், ரீகல் பவுண்டேசன் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை திருவான்மியூர் திருவீதியம்மன் கோயில், 2வது தெருவைச் சேர்ந்த சாம் ஏசுதாஸ் (53) என்பவரிடம் நிலத்தை கிரையம் செய்து தருவதாக 4 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களுக்குச் சொந்தமில்லாத மனையை விற்பனை செய்து தருவதாக சொல்லி பதிவு செய்யாத கிரைய ஒப்பந்தத்தை சாம் ஏசுதாஸிடம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறிது நாட்கள் கடந்தும் ஒப்பந்தத்தில் உள்ளது போல் மனையை கிரையம் செய்து கொடுக்காமல், பணத்தை திருப்பிக் கேட்டால் தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாம் ஏசுதாஸ், தாம்பரம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ரீகல் பவுண்டேசன் நிர்வாக இயக்குநர் ராஜவேல், மேலாளர் நமச்சிவாயம் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம நடைபெற்ற விசாரணையில், இவர்கள் இருவரும் சேர்ந்து 51 பேரிடம் பல்வேறு இடங்களில் உள்ள நிலத்தின் பவர் பெற்றுள்ளதாகக் கூறி, பதிவு செய்யாத கிரைய பத்திரத்தைக் காட்டி ஏமாற்றி 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் மீது 406, 420, 506(1), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.