சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல டயர் தொழிற்சாலையில் இருந்து பிரேசில் நாட்டிற்கு டயர்களை ஏற்றுமதி செய்ய கன்டெய்னரில் ஏற்றப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகளால் சீலிடப்பட்டு, லாரி மூலம் கடந்த பிப்ரவரி மாதம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலில் ஏற்றப்பட்ட 1500 டயர்கள் அடங்கிய கன்டெய்னர் பிரேசில் நாட்டிற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பிரேசில் நாட்டிற்கு அனுப்பப்பட்ட கன்டெய்னரை பரிசோதித்த போது அதில், டயர்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக டயர் தொழிற்சாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து டயர்கள் அடங்கிய கன்டெய்னரை ஏற்றிச் சென்ற லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்தனர். அப்போது லாரி தேவையின்றி பல்வேறு இடங்களில் நின்று தாமதமாக காமராஜர் துறைமுகத்திற்குச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து ஏற்றுமதி நிறுவனம் சார்பில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக கன்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்து நடத்திய விசாரணையில் துறைமுகத்திற்கு செல்வதற்கு முன்பாக வழியில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கன்டெய்னரில் இருந்த சுங்கத்துறை சீலை அகற்றாமல் நூதன முறையில் டயர்களை திருடியதை ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து மணலியைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சுப்பிரமணி (29), திருவொற்றியூரைச் சேர்ந்தஇளமாறன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டயர் திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும், மீஞ்சூர் குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.