சென்னையில் Dark என்ற இணையதளத்தை பயன்படுத்தி LSD ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மதுபான கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் சிலர் சட்டத்திற்கு விரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் பூக்கடை துணை ஆணையாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் உதவி ஆணையர் வீரக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சக்திவேல் என்பவர் Dark இணையதளத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து எல்எஸ்டி ஸ்டாம்ப் வகை போதை பொருட்களை சென்னைக்கு வரவழைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சேலையூர் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சக்திவேல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சக்திவேல் உட்பட அந்த அறையில் இருந்த ஷாம் சுந்தர், ஸ்ரீகாந்த், நரேந்திர குமார் ஆகிய நான்கு பேரையும் பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மென் பொறியாளரான சக்திவேல், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மாடியில் கஞ்சா செடியை வளர்த்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சக்திவேல் Dark வெப்சைட் மூலமாக வெளிநாடுகளில் LSD ஸ்டாம்ப் போதைப் பொருளை ஆர்டர் செய்து அதனை சென்னைக்கு வரவழைத்துள்ளார். இதையடுத்து இணையதளத்தில் 200 முதல் 600 ரூபாய் வரை ஸ்டாம்ப் போதை பொருளை வாங்கி சென்னையில் பல்வேறு பகுதிகளில் 1500 முதல் 2000 வரை விற்பனை செய்து வந்துள்ளார்.
ரயில்வேயில் பணியாற்றும் ஷாம் சுந்தர் என்பவர் சக்திவேலிடமிருந்து டுளுனு ஸ்டாம்ப் போதைப் பொருளை 1500 ரூபாய்க்கு வாங்கி தனக்கு தெரிந்தவர்களுக்கு ரூ.2000 முதல் 2500 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளார். இவர்கள் இருவரும் போதைப் பொருள் விற்பனை செய்வதற்காக கால் சென்டரில் பணியாற்றும் ஸ்ரீகாந்த், நட்சத்திர விடுதி மேலாளர் நரேந்திர குமார் ஆகிய இருவரும் உடந்தையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் செய்து சென்னைக்கு டெலிவரி செய்ய வைத்துள்ள டுளுனு ஸ்டாம்ப் போதை பொருளுக்கான பணத்தை கிரிப்டோ கரன்சி மூலமும் வழங்கியதாக சக்திவேல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார், வெளிநாட்டு எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப் பொருள் மற்றும் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு காவல்துறை சார்பில் அதிக அளவில் மேற்கொண்டுள்ளப்பட்டு வந்தாலும் இது போன்று ஒருசில இடங்களில் போதைப் பொருள் விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் என பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.