முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி சென்னை கொரட்டூரில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி உட்பட 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற ராஜா. இவர், செங்குன்றம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி ஒரு கும்பல் ராஜாவை காரில் கடத்திச் சென்று ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், பின்னர், தான் வைத்திருந்த ரூ. 20,000-த்தை பறித்துக்கொண்டு விடுவித்தாக செங்குன்றம் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து சம்பவ இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதில், சென்னை கொரட்டூர் அடுத்த மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை காவலர்கள் அங்கு சென்று அங்கிருந்த 6 நபர்களை பிடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி, 6 பட்டா கத்திகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தியதினர். விசாரணையில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சேதுபதி, அவனது கூட்டாளிகள் விக்கி, பாலகிருஷ்ணன், விஜய், சரவணன், தமிழரசன் ஆகியோர் என்பதும், ஆட்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், இவர்களுக்கு மூலையாக செயல்பட்டது பிரபல ரவுடி சேதுபதி என்பதும், இவர் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவனது கூட்டாளிகள் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில், முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.