சென்னை விமான நிலையத்தில் ரூ.9.86 கோடி மதிப்புள்ள 49.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவு (ஏ,சி,ஐ,யு) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன. தகவலின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலைய சரக்கு பகுதியில் வெளி நாட்டிற்க்கு அனுப்பப்படும் பார்சல்களை தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிற்கு அனுப்ப இருந்த பாக்ஸ்களை பிரித்து சோதனை செய்தனர். அப்போது காட்டன் சட்டைகள் இருந்தன. சட்டைகள் கலையாமல் இருப்பதற்கு சட்டையின் மடிப்புகளில் அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் சட்டைகளை கலைத்து அட்டைப் பெட்டிகளை கிழித்து பார்த்தனர். அப்போது 1200 சட்டைகளில் 515 சட்டைகளில் போதை பவுடர்கள் மறைத்து கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் சூடோபெட்ரின் என்ற வகையைச் சேர்ந்த 49.2 கிலோ போதை பவுடரை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 9.86 கோடி என தெரியவருகிறது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பார்சல்களின் முகவரியில் இருந்த மூன்று நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.