கடந்த 3 மாதங்களில் காணாமல்போன மற்றும் திருடு போன ரூ. 1 கோடி மதிப்பிலான 863 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ள சென்னை காவல்துறையின் பணி கவனம் பெற்றுள்ளது.
சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சம்பந்தப்பட்ட காவல்துணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினருடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
செல்போன்களின் அடையாள குறீயிடு எண்கள் (IMEI) மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உதவியோடு, காவல்துறைனர் எடுத்த இந்த சீரிய நடவடிக்கையால் சென்னை வடக்கு மண்டலத்தில் 280 செல்போன்கள், மேற்கு மண்டலத்தில் 175 செல்போன்கள், தெற்கு மண்டலத்தில் 205 செல்போன்கள், கிழக்கு மண்டலத்தில் 203 செல்போன்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றில் பெரும்பாலான செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. செல்போன்களை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து அவர் பேசுகையில், “சென்னை காவல் துறை பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. செல்போன் திருட்டு சிறிய சம்பவம் என நினைக்கிறோம். ஆனால் பெரிய குற்றத்திற்கு அது வழிவகுக்கும். ஒவ்வொருவரின் நினைவுகளும் செல்போனில் இருக்கும். அவை பறிபோனால் மிகுந்த வேதனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் உள்ளாக நேரிடும். அவை மதிப்பில்லாதவை.
சென்னை காவல்துறை அதிகாரிகள் காலையில் பணி தொடங்கும்போதே திருடுபோன செல்போன்களில் எத்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? என்ற கேள்வியோடுதான் பணியை தொடங்குகிறோம்.
கடந்த 3 மாதங்களில் 863 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் செல்போன்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்" என்றார்.
செல்போன்களை பெற்றுக் கொண்ட முகப்பேரைச் சேர்ந்த ஈஸ்வரி கூறும்போது, “கடந்த ஆகஸ்ட் மாதம் எனது செல்போன் தொலைந்து போனது. நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். திரும்ப கிடைத்துவிடும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை. காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”என்றார்.
தாம்பரத்தைச் சேர்ந்த சந்தியா, கூறும்போது, “ நான் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். பணியின்போது செல்போனை மேஜை மீது வைத்திருந்தேன். அப்போதுதான் செல்போன் திருடுபோனது . என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். செல்போனை எல்லாம் காவல்துறை கண்டுபிடித்து கொடுப்பார்களா என நினைத்தேன். உங்களது செல்போன் கிடைத்து விட்டது என போன் செய்து தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.” என்றார்.