சென்னையை அடுத்த அம்பத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான கடத்தல் செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் காவல்நிலைய போலீசார் கள்ளிக்குப்பம் சாலையில் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி சென்றனர். உடனே அவர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ் மற்றும் அவரின் கூட்டாளிகள் என்பதும், செம்மரம் கடத்தி வந்தவர்களுக்கு துணையாக வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முகமது அப்பாஸ் அளித்த தகவலின் பேரில் சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே நின்ற லாரியை காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் 5 பெரிய அளவு மரப்பெட்டிகளில் பதுக்கி கொண்டுவரப்பட்ட செம்மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் டேவிட் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
லாரியில் இருந்த 2 கோடி மதிப்பிலான 3.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் செம்மரங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, அதற்கு பின்புலத்தில் உள்ளது யார்? என்பது குறித்து கைது செய்யப்பட்ட இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.