வழக்குப்பதிவு செய்தால் மாணவர்கள் என்னென்ன பிரச்னைகள் சந்திக்க நேரிடும்: போலீஸ் அறிவுரை

வழக்குப்பதிவு செய்தால் மாணவர்கள் என்னென்ன பிரச்னைகள் சந்திக்க நேரிடும்: போலீஸ் அறிவுரை
வழக்குப்பதிவு செய்தால் மாணவர்கள் என்னென்ன பிரச்னைகள் சந்திக்க நேரிடும்: போலீஸ் அறிவுரை
Published on
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கல்லூரிகளுக்கு நேரிலேயே சென்று மாணவர்களுடன் உரையாடி அறிவுரை வழங்கியுள்ளது சென்னை காவல்துறை.
செப். 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் விதிகளை மீறி ஊர்வலமாக சென்று கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர். இவ்விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். மற்றொருபக்கம், பேருந்தில் அட்டகாசம் செய்யும் நிகழ்வுகளும் நடந்தது. இதுதொடர்பாகவும் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீது டிபி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று சென்னை புறநகர் ரயிலில் பச்சையப்பன் மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த சம்பமும் கடந்த வாரத்தில் நடந்தது.
தொடர்ச்சியான இப்படியான சம்பவங்கள் யாவும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் "ரூட்டு தல" என்று கூறி மோதலில் ஈடுபடவும், பேருந்து தினம் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசத்தில் ஈடுபடவும், மின்சார ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் கூட்டமாக மோதிக்கொள்ளுதல் போன்றவற்றுக்கு வழிவகுத்தன. இப்படி தொடர்ந்து பல்வேறு விரும்பதகாத செயல்களில் கல்லூரி மாணவர்கள்  ஈடுபட்டு வருவதை தடுப்பதே தற்போது சென்னை காவல்துறையின் முக்கிய பணியாகி விட்டது. 
இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை போலீசார் கையாண்டு வருகின்றனர். இருப்பினும் வழக்குப்பதிவு செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கல்லூரிகள் அமைந்துள்ள காவல் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு கீழ்ப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ், கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் வனிதா, டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கல்லூரி முதல்வர் ஸ்ரீஜெயந்தி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களை வரவழைத்து மோதல், பேருந்து தினம் போன்றவற்றால் பொதுமக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகின்றனர். வழக்குப்பதிவு செய்தால் அதன் பிறகு என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதனை கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் மாணவர்களிடம் தெளிவுபடுத்தி அறிவுரை வழங்கினார்.
கல்லூரி மாணவர்கள் காவல்துறையினர் நண்பர்கள் போல இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகள் கூட தங்களால் செய்து தர முடியும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் ஆய்வாளர்கள் பேசி அறிவுரை வழங்கினர். இதைபோல சென்னை ராயப்பேட்டை நியூ கல்லூரியிலும் மாணவர்களை ராயப்பேட்டை உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று சந்தித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com