சென்னை அம்பத்தூர் பகுதியில் உணவு டெலிவரி செய்வது போல் நடித்து இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அம்பத்தூர் பகுதியில் வீடு, கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திடீரென மாயமாகின. வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருடு போன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பைக் கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்நிலையில், புதூர் பகுதியில் வாகன தணிக்கையின் போது, பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அவர் ஓட்டி வந்த வாகனத்திற்கான ஆவணங்களும் இல்லாததால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அதில், அந்த நபர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பதும், இருசக்கர வாகனங்கள் திருட்டுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உணவு டெலிவரிக்காக செல்லும்போது ஆள் இல்லாத இடத்தை நோட்டமிட்டு வாகனங்களை திருடி வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஜோசப் திருடி வைத்திருந்த 7 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.