சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இரு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுள் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (55) மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாவதி (62) ஆகியோர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் தங்களின் 3 மற்றும் 5 சவரன் தங்க செயின்களை பறித்துச் சென்றதாகவும், அவர்களை கண்டுபிடித்து தங்கள் செயின்களை மீட்டுத் தரும்படியும் தனித்தனியாக புகார் அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அண்ணா நகர் போலீசார், சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் பெண்களை கீழே தள்ளி அவர்களின் கழுத்தில் இருந்து செயினை விடாபிடியாக பறித்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளையும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களின் இருசக்கர வாகன எண்ணையும் வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த டேவிட் குமார் (24) என்பவவரை கைது செய்த அண்ணா நகர் போலீசார், அவரிடமிருந்து 5 சவரன் தங்கச் செயினையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்குப் பின் கைதான டேவிட் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து டேவிட் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் அவருடன் குற்றச் செயலில் ஈடுபட்ட கூட்டாளியான மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.