மெரினாவில் மது போதையில் வயதான பெண்ணிடம் நகை மற்றும் பணம் கேட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்த நபரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் பொதுமக்கள் பொழுதுபோக்க வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று நள்ளிரவு மெரினா லூப் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவில் மழைக்காக ஆட்டோவில் உட்கார்ந்து கொள்கின்றோம் என்று மூன்று பேர் கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த வயதான பெண்மணி சாந்தியும் ஆட்டோ ஓட்டுநரும் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், சிறிது நேரத்தில் அந்த மூன்று பேரும் மதுபோதையில் இருப்பதை அறிந்த சாந்தி, அவர்களை கீழே இறங்கச் சொல்லி இருக்கின்றார். உடனே அந்த மூன்று பேரும் அவர்களின் கையில் இருந்த சிறு கத்தியை எடுத்து ஆட்டோ ஓட்டுநரை அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து சாந்தியின் காதில் இருந்த தங்க கம்பல் மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் உடனே சாந்தியின் முகத்தில் சரமாரியாக குத்தி உள்ளனர்.
இதில் நிலைகுலைந்த சாந்தியின் கழுத்தை லேசாக அறுத்துவிட்டு அங்கிறுந்து 4பேரும் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து அருகில் இருந்த நபர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க எதிர் வழியாக வந்த போலீசார் நான்கு நபர்களையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதில் இரண்டு பேர் சட்டென்று பறந்துவிட ஒருவர் மட்டும் கடற்கரை மணலில் ஒடி, கடலில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டன், வெங்கடேசன், விஜயகுமார் ஆகியோர் அவரை துரத்தி பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசாரிடம் கத்தியை காட்டி தாக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவனை மடக்கிப் பிடித்த போலீசார், கரைக்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும் இவர், ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று சமீபத்தில் தான் வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த மைலாப்பூர் போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.