முதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் இளைஞர் கைது
தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு 18 முறை போலி தகவல் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்துள்ளது. இந்தத் தொலைபேசி அழைப்பில் ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் தொலைபேசி அழைப்பு விடுத்த நபர் ஏற்கெனவே ஒரு நாளில் 17 முறை வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையின் கட்டுபாட்டு அறைக்கு போலி தகவல் அளித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் பெயர் வினோத் என்றும். அவர் தாம்பரைத்தை அடுத்த சேலையூர் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் தான் கொடுத்தது போலி புகார் என்று காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கு காரணமாக அவர், “எனது மனைவி என்னை விட்டு சென்று விட்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க சென்ற போது எனது புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நான் விரக்தியில் இருந்தேன். எனவே நான் குடிபோதையில் இந்தத் தொலைப்பேசி அழைப்பை செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இவர் தனது கைப்பேசியிலிருந்து தொலைபேசி அழைப்பு விடுத்ததால் காவல்துறையினர் இந்த கைப்பேசி டவரை வைத்து இடத்தை கண்டுபிடித்தனர். கடந்த ஜுலை மாதம் இதே புகாருக்காக வினோத் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.