பழங்கால பொருட்களை மட்டுமே குறிவைத்து திருடும் கொள்ளையனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பழமையான குபேரன் சிலை, நாற்காலி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாந்தோம் சர்ச்சில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புடைய 100 வருட கால பழமையான நாற்காலி ஒன்று காணாமல் போனதாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சர்ச் நிர்வாகம் புகார் அளித்துள்ளனர். இதேபோல சிவசாமி சாலையில் உள்ள வீடு ஒன்றில் 60 ஆண்டு கால பழமையான குபேரன் சிலை திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான அடையாளங்களை வைத்து போலீசார் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்து (40) என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
பின்னர் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த முத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்து கார்பெண்டராக பணியாற்றி வருவதும், இவர் வீடு மற்றும் கோயில்களுக்குச் சென்று பழங்கால பொருட்களை வாங்கிக் கொள்வதாக கூறி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் பழங்கால பொருட்களை விற்க நினைக்கும் நபர்களிடம் பொருட்களின் தொன்மை குறித்து கேட்டறிந்து செல்வதை முத்து வாடிக்கையாக வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து பொருட்களின் தொன்மை குறித்து அறிந்து கொண்ட முத்து, அன்றிரவு நோட்டமிட்டு வீடுகள் மற்றும் கோயிலுக்குள் புகுந்து பழங்கால பொருட்களை திருடி வந்துள்ளார். பின்னர் திருடிய பொருட்களை பர்மா பஜார், புதுப்பேட்டை, ஆகிய பகுதிகளில் உள்ள பழங்கால பொருட்கள் விற்கும் கடைகளில் 30 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த பணத்தில் முத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கெனவே பழங்கால பொருட்களை திருடியதாக முத்து மீது தேனாம்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும், இரண்டு முறை முத்து கைதாகி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட முத்துவிடம் இருந்து பழங்கால நாற்காலி மற்றும் குபேரன் சிலையை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.