செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், அவருடன் வந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளார். அந்தப் பெண் மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூச்சலிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வீடியோவில் பதிவான இருசக்கர வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இளம் பெண்ணை தாக்கியது, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரோஷன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரோஷன் மீது ஏற்கனவே வண்ணாரப்பேட்டை மற்றும் மாங்காடு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ரோஷன் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா (21) என்பவரை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதும், நேற்று மதியம் கேகே.நகரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது சந்தேகப்பட்டு அவரது மனைவி சந்தியாவை ரோஷன் தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரோஷன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.