விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு எதிரான கையாடல் வழக்கில் ஆறு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல்செய்ய விருகம்பாக்கம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித்தொகை 45 லட்சம் ரூபாயை வரித்துறைக்கு செலுத்தி விட்டதுபோல போலி ஆவணங்களை காட்டிவிட்டு, அத்தொகையை தனது உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார்மீது கடந்த 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டபோதும், இறுதி அறிக்கை ஏதும் இதுவரை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, மேலாளர் ஹரிகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், 6 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.