செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (59). மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு, பணத்தை கொடுத்தபோது, பாக்கெட்டில் இருந்து சிறு சிறு தங்க நகைகளை எடுத்து வைத்துள்ளார். இதனை கண்ட மளிகை கடைக்காரர் நகை குறித்து கேட்டள்ளார். அப்போது, வேலை பார்க்கும் இடத்தில் பள்ளம் தோண்டிய போது தங்க நகைகள் கிடைத்ததாகவும், தனது மகள் திருமண செலவிற்காக சிறிதளவு தங்கத்தை விற்க உள்ளதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து உங்களுக்கு தேவை என்றால் குறைந்த விலைக்கு தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி, செல்போன் எண்ணை கொடுத்து விட்டுச் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து குமாரசாமி, அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு நகையை வாங்கிக் கொள்வதாக கூறியதன் பேரில் அவரும் நகையை கொடுத்துள்ளார். நகையை அருகில் உள்ள நகைக்கடையில் சோதித்து பார்த்த போது உண்மையான நகைகள் என தெரியவந்தது.
இதனை நம்பிய மளிகை கடைகாரர் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வைத்து, நகையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.
இந்நிலையில், சில தினங்களுக்குப் பிறகு அவர் பார்த்த செய்தியால் அதிர்ச்சியடைந்த அவர், தான் வாங்கி வைத்துள்ள நகைகளை சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது அவை போலி நகைகள் என தெரியவந்ததை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி நகைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த பாபுலால் ரத்தோடு (36), ராகுல் (23), ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போலி நகைகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.