சென்னை: பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக 4 ரவுடிகள் கைது

சென்னை: பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக 4 ரவுடிகள் கைது
சென்னை: பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக 4 ரவுடிகள் கைது
Published on

வியாசர்பாடியில் பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித். இவர், வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத 3 பேர் அவரது கடைக்குச் சென்று கத்தியை காட்டி மிரட்டி துணிகளை திருடியதோடு 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். ஜாவித் பணம் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டிவிட்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற செம்பியம் போலீசார், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் பதுங்கியிருந்த வியாசர்பாடி பிவி காலனி பகுதியைச் சேர்ந்த கலை என்ற கலைச்செல்வன், மாதவரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற பச்சை பாம்பு, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற ஜோதிகுமார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தினகரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து மூன்று பட்டா கத்திகள் மற்றும் 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வியாசர்பாடி பி.வி காலனி பகுதியில் 2 ரவுடி கும்பல் செயல்பட்டு வந்ததும் அதில் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்த தொப்பை கணேசன் என்பவர் அதே பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்கு வருவதை அறிந்திருந்து, கொலை செய்ய திட்டம் தீட்டி நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகளை பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.

இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com