சென்னை மாதவரத்தில் ஃபேஸ்புக் நட்பில் உள்ளவர்களிடம் பெண் குரலில் பேசி வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஐயப்பன். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாதவரம் ரெட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த செல்போன், பிரேஸ்லெட், மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதாக மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, மாதவரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை கண்டதும் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4பேர் வேறு பாதையில் தப்பிக்க முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஜயகுமார், தினேஷ், தமிழ் மற்றும் மோனீஷ் ஆகிய 4 பேரும் ஃபேஸ்புக் வாயிலாக புதிதாக அறிமுகமாகும் நபரிடம் நட்பாக பேசி அவர்களது பலவீனத்தை அறிந்து கொள்வார்கள். அதன்பிறகு அவர்களது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசி தனி இடத்திற்கு வரச்செல்வார்கள்.
அப்படி தனியாக வரும் அந்த நபரை அடித்து உதைத்து அவரிடம் இருக்கும் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துச் செல்வது வாடிக்கை. இதை பலர் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என புகார் கொடுக்காமல் இருந்ததாகவும், காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், மாதவரத்தைச் சேர்ந்த ஐயப்பனிடமும் இந்த மர்ம கும்பல் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த மாதவரம் காவல் துறையினர், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், செல்போன், பிரேஸ்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த 4 பேரில் மோனிஷ் என்பவர் கடந்த ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சிறை சென்று இந்த மாதம் விடுதலையானவர் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது