செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னையில் கல்லூரிகள் திறப்பதையொட்டி முக்கிய கல்லூரிகளான பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பஸ்டே மற்றும் சாலையில் நடந்து சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
இதே போல புது வண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே சில கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்த போது, சாகர் கவாச் சோதனையில் ஈடுபட்டிருந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், கூட்டமாக நின்றிருந்த கல்லூரி மாணவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது மூன்று மாணவர்கள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், பிடிபட்ட நான்கு மாணவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் நான்கு பட்டாக்கத்திகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மாநிலக் கல்லூரி மாணவர்களான கவரப்பேட்டையை சேர்ந்த குணா (20), ஜனகன் (19), தாம்பரத்தை சேர்ந்த பாலாஜி (19), பொன்னேரியை சேர்ந்த இசக்கி (20) ஆகிய நான்கு பேர் என்பதும் இவர்கள் பிரெசிடென்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கல்லூரியின் முதல் நாள் என்பதால் பேருந்தில் பஸ்டே கொண்டாட திட்டமிட்டு இருந்ததும் அப்போது கெத்து காட்டி தரையில் தேய்க்க பட்டாக் கத்திகளை மாணவர்கள் கொண்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நான்கு மாணவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.