”வாக்கிங் செல்லும் பெண்களே டார்கெட்” : குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் கைது

”வாக்கிங் செல்லும் பெண்களே டார்கெட்” : குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் கைது
”வாக்கிங் செல்லும் பெண்களே டார்கெட்” : குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் கைது
Published on

சென்னையில் நடைபயிற்சி செல்லும் பெண்ககளை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ராஜா அண்ணாமலை புரம், காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் கடந்த மாதம் 10ஆம் தேதி மயிலாப்பூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்தபடி வந்த மூன்று பேர், திலகவதியின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறை இணை ஆணையர் சுதாகர் மேற்பார்வையில், கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து தலைமைக்காவலர்கள் சரவணகுமார், ஆனந்த், ராஜேஷ் கண்ணன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 90 சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பெரும்பாகக்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் கூட்டாளிகள் இரு பிரிவாக பிரிந்து செயின்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. சந்தோஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாக்கத்தில் 80 லட்ச ரூபாய் அளவிற்கு பண்ணை வீட்டில் புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

அதிகாலைப் பொழுதில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் இந்தக் கும்பல், நடைபயிற்சி செல்லும் பெண்களையும், பேருந்து மற்றும் ஆட்டோவில் ஓரமாக உட்கார்ந்து செல்லும் பெண்களையும் குறி வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திலகவதியிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த அபி என்கிற அபிமன்யு (21), நஜீர் (20) மற்றும் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த அஜய் ராகுல் (20) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மாதவரத்தில் 2 சங்கிலி பறிப்பு வழக்கிலும், வில்லிவாக்கத்தில் ஒரு சங்கிலி பறிப்பிலும் மற்றும் கீழ்ப்பாக்கம், அபிராமபுரம், கோட்டூர்புரம் பகுதிகளில் 9 குற்ற வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்ணாநகர், எம்கேபி நகர், ராயபுரம், திருவேற்காடு, புளியந்தோப்பு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருடும் வாகனங்களை ஒரு நாள் மட்டுமே கொள்ளைத் தொழிலுக்கு பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி திருட்டு இருசக்கர வாகனங்களை பிற குற்றச்சம்பவங்களுக்காக வாடகைக்கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் மற்றும் 64 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொள்ளையர்கள் மார்ச் மாதம் முதல் அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் மட்டும் இருசக்கர வாகனம் திருட்டு, சங்கிலி பறிப்பு உள்பட 13க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com