வியாசர்பாடி பகுதியில் குடிபோதையில் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகரை பட்டாக்கத்தியால் வெட்ட முயன்ற 3 பேரை போலீசாரால் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்கேபி நகர் 4-வது இணைப்பு சாலை பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை திருமண நிகழ்வுக்குச் செல்வதற்காக வியாசர்பாடி முல்லை நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூன்று நபர்கள் குடிபோதையில் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரபாண்டியன், அவர்களிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு குடிபோதையில் இருந்த ஒரு நபர் வீரபாண்டியனை தள்ளிவிட்டு மற்றொரு நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வீரபாண்டியன் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி உயிர் தப்பினார். உடனடியாக இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வியாசர்பாடி ஜேஜேஆர் நகர் 8-வது தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (26), எம்ஜிஆர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (28), வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (எ) அருப்பு (28) ஆகிய 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 3 பேரையும் எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.