‘யாராவது கிட்ட வந்தா சுட்டுடுவேன்’: உயிர் பயமின்றி கொள்ளையனை பிடித்த காவலர்கள்!

‘யாராவது கிட்ட வந்தா சுட்டுடுவேன்’: உயிர் பயமின்றி கொள்ளையனை பிடித்த காவலர்கள்!
‘யாராவது கிட்ட வந்தா சுட்டுடுவேன்’: உயிர் பயமின்றி கொள்ளையனை பிடித்த காவலர்கள்!
Published on

2 துப்பாக்கிகளுடன் ரூ.6 லட்சத்தை வங்கியில் கொள்ளையடித்துச் சென்ற திருடனை போக்குவரத்து காவலர்கள் தைரியமாக பிடித்துள்ளனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் இன்று வாடிக்கையாளர் போல வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்தான். வாடிக்கையாளர்கள் பணம் போடுவது, காசாளர் பணத்தை வாங்கி வாடிக்கையாளரின் கணக்குகளில் செலுத்துவது என வங்கி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பொறுமையாக அனைத்தையும் கவனித்த கொள்ளையன், திடீரென தான் மறைத்து வைத்திருந்து நாட்டுத் துப்பாக்கியை எடுத்தான். ஹிந்தி கலந்த அரைகுறை தமிழில் காசாளரை மிரட்டி, இருக்கும் பணத்தை எடுத்து தன்னிடம் கொடுக்குமாறு கூறினான். 

காசாளர் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க, ‘ம்ம்.. பணத்தைக் கொடு இல்லையென்றால், சுட்டுவிடுவேன். யாராவது என்கிட்ட வந்தா அவர்களையும் சுட்டுடுவேன்’ என மிரட்டினார். துப்பாக்கியை பார்த்ததும் அனைவரும் நடுங்க, அருகில் இருந்த ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையனிடம் கொடுத்தார் காசாளர். பணத்தை வாங்கியதும், பதட்டத்துடன் ‘ஏய் யாரும் கிட்ட வாராதீங்க சுட்டுடுவேன்’ என அதட்டியபடியே வங்கியை விட்டு வெளியேறினான். மிரட்டியவாறே வங்கியை விட்டு வெளியேறி, தான் நிறுத்திவிட்டு வந்த பைக்கின் அருகே சென்றான். கொள்ளையன் பைக்கை உதைக்கவும், அவன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி எதார்த்தமாக வெடிக்கவும் ‘படார்’ என்ற சத்தம் அனைவரின் காதையும் பிளந்தது. 

இந்தச் சத்தத்தை கேட்டு, அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்கள் கொள்ளையனை நோக்கி ஓடிவந்தனர். அவன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ‘யாராவது கிட்ட வந்தா சுட்டுடுவேன். கிட்ட வாராதீங்க’ என மிரட்டினான். ஆனால் நமது போக்குவரத்து காவலர்கள் ‘பயமா? எனக்கா?’ என கபாலி பட வசனத்தின் பாணியில், கொள்ளையனை பாய்ந்து பிடித்தனர். வசமாக சிக்கிக்கொண்டான் கொள்ளையன். அவன் சிக்கிக்கொண்டான், கையில் இருந்த துப்பாக்கி பிடுங்கப்பட்டது என தெரிந்தவுடன், அங்கிருந்த மக்களுக்கு வீரம் பொங்க, கொள்ளையனை அடி வெளுத்தனர்.

இதில் கொள்ளையன் லேசான காயம் அடைய, அவனை அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு போக்குவரத்து காவலர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையன் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனிப் யாதவ் (30) என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com