லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 1.6 கோடி மோசடி செய்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் வசிப்பவர் பிரபாவதி. இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "எனக்கு அறிமுகமான விநாயகா ஆச்சார்யா மற்றும் ஜகுபர் அலி ஆகிய இருவரும் எனக்குச் சொந்தமான வீடு மற்றும் காலி மனையை வைத்து லோன் வாங்கித் தருவதாகக் ஆசை வார்த்தை கூறினர். என்னிடம் ஸ்டாம்பு பேப்பர்கள் மற்றும் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதை வைத்து எனது சொத்தை ஜகுபர் அலிக்கு கிரைய பதிவு செய்து அதன் பேரில் ரிலயன்ஸ் ஹோம் பைனான்சில் கடன் பெற்றுள்ளனர்.
மேலும், எனக்குத் தெரியாமல் என் பெயரில் துவங்கிய வங்கிக் கணக்கில் கடன் தொகையை வரவு வைத்து, பைனான்சில் இருந்து பெற்ற கடனை விநாயகா ஆச்சார்யா காசோலையை பயன்படுத்தி எடுத்துக் கொண்டார். இவ்விருவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு நம்பிக்கை மோசடி செய்து என்னிடமிருந்து 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பிரபாவதியை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகா ஆச்சார்யா மற்றும் எம்.கே.பி நகரைச் சேர்ந்த ஜகுபர் அலி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவ்விருவர் மீதும் ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.