ஆன்லைன் மூலம் லோன் தருவதாகக் கூறி நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். பெண்களை வைத்து பணம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டது அம்பலமானது.
சென்னை மதுரவாயல் அடுத்த செட்டியார் அகரம் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (48). இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பஜாஜ் பைனான்ஸ் மூலமாக லோன் தருவதாக பிரியா என்ற பெண் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியபோது, “உங்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் மூலமாக லோன் தருகிறோம். அதற்கு முன்பணமாக 6000 செலுத்த வேண்டும். அக்கவுண்ட் நம்பர் அனுப்புகிறோம். அதில் 6000 பணம் செலுத்தினால் லோன் தருகிறோம்” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து பணத் தேவையில் இருந்த நாகராஜன் லோன் பெறுவதற்காக அவர்கள் அனுப்பிய அக்கவுண்ட் நம்பருக்கு 6 ஆயிரம் பணத்தை செலுத்தி இருக்கிறார்.
ஆனால், பணம் செலுத்தி இரண்டு மாதங்களாகியும் அவர்கள் எந்தவித லோன் சேவையும் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் முன்பணமாக செலுத்திய 6000 பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். தான் ஏமாந்து இருப்பதை அறிந்த நாகராஐன் மதுரவாயல் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நாகராஜனுக்கு வந்த செல்போன் நம்பரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், திருவண்ணாமலை மாவட்டம் சாந்திமேடு பகுதியை சேர்ந்த பரத் (28) என்ற நபர் இதுபோன்ற நூதன முறையில் லோன் தருவதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.