செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை பெரம்பூர் லோகோ பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (33). இவர், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை பேச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் 28ம் தேதி காயத்ரி, குன்றத்தூரில் உள்ள தந்தை வீட்டிற்கு செல்வதற்காக பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நின்றது. மகளிர் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் இறங்கிவிட்ட நிலையில், காயத்ரி தனது குழந்தையுடன் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் அந்த மின்சார ரயில் பெட்டியில் ஏறியுள்ளார்.
இந்நிலையில், காயத்ரியின் குழந்தை அணிந்திருந்த சுமார் 15 சவரன் நகையை கழட்டித் தருமாறு பட்டாகத்தியை காட்டி காயத்ரியை மிரட்டியுள்ளார். காயத்ரி தர மறுத்ததை அடுத்து அந்த மர்ம நபர் பட்டாகத்தியால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது சாமர்த்தியமாக கத்தியை பிடித்த காயத்ரி, மர்ம நபரை எட்டி உதைத்துள்ளார்.
இதையடுத்து கீழே விழுந்து மர்ம நபர் மீண்டும் காயத்ரி அருகே வந்து அவர் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு மின்சார ரயில் ஓடும் போதே குதித்து தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து காயத்ரி அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆவடி ரயில்வே போலீசார், அந்த மர்ம நபரை தேடிவந்தனர்.
இந்நிலையில் மாங்காடு பேருந்து நிலையம் அருகே தங்கி இருந்த பாட்ஷா (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.