செய்தியாளர்: சாந்தகுமார்
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் அசாருதீன் (35). இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில் மொத்தமாக மருந்துகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். குறைந்த விலைக்கு மருந்துகளை விற்று அதிக லாபம் பார்த்து வந்துள்ளார். இவரது தொழில் வளர்ச்சியை பிடிக்காத அந்த தனியார் மருத்துவமனையின் மருந்தக பிரிவு தலைமை பொறுப்பில் இருக்கும் இம்ரான் என்பவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் பணிபுரியும் சதீஷ் என்பவருடன் சேர்ந்து, அசாருதீனை மிரட்டி விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரும் சேர்ந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் யஸ்வந்த் என்பவரை அணுகி இந்த திட்டம் குறித்து கூறி தொழில் தொடங்கினால் கூட்டாளியாக சேர்த்துக் கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து வழக்கறிஞரும் அதிக பணம் கிடைக்கும் என்பதால், அவரிடம் வழக்கிற்கு வரும் கொலை குற்றவாளிகளான கார்மேகம், அருண்குமார் ஆகியோரை அணுகி அசாருதீனை கண்காணிக்க சொல்லியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி குன்றத்தூர் அருகே அசாருதீன் வீட்டிற்குச் சென்ற போது போலீஸ் என கூறி துப்பாக்கி முனையில் காரில் கடத்தியுள்ளனர்.
இதையடுத்து அசாருதீனை அருகில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு பயந்து போன அசாருதீன் 8 லட்ச ரூபாயை அவர்களிடம் கொடுத்துவிட்டு உயிர் பிழைத்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அசாரூதீனை தொடர்பு கொண்ட அந்த கும்பல் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இதனையடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் அசாருதீன் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்களை பணம் வாங்க வரவழைத்து 9 பேரையும் கூண்டோடு கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், துப்பாக்கி, வாக்கிடாக்கி, செல்போன், உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் பம்மலை சேர்ந்த வழக்கறிஞர் யஸ்வந்த (33), ரபீக்(40), பல்லாவரத்தை சேர்ந்த இம்ரான் (27), வேணுகோபால் ராவ் (27), பம்மலை சேர்ந்த சதீஷ் (29), குன்றத்தூரை சேர்ந்த ஆண்டனி (36), அருண் (40), பெரும்பாக்கத்தை சேர்ந்த கார்மேகம் (38), அருண் குமார் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.