செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை கொட்டிவாக்கம், நேருநகர், 2வது மெயின் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கார் ஓட்டுநர் முகமது அலி (26). இவர் தனது நண்பருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் முகமது அலியை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனை கண்ட அவருடன் வந்த மற்றொரு நபர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தரமணி போலீசார், சம்பவ இடம் சென்று விசாரணை செய்து, கடத்தப்பட்ட காரின் விவரங்களை விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடத்தப்பட்ட இளைஞர் முகமது அலியை விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் அருகே ஓங்கூர் சுங்கச் சாவடியில் மீட்டனர்.
இதையடுத்து அவரை கடத்திய கள்ளக்குறிச்சியை சேர்ந்த சாமுண்டி (75), ஆறுமுகம் (43), அருள் (26) ரவிசங்கர் (24), சண்முகம் (50), சிலம்பரசன் (33) ஆகிய ஆறு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முகமது அலி தன் சித்தி மகளின் தோழியான ரங்கீலா (25) என்ற பெண்ணை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக சரிவர பேசாமல் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ரங்கீலா கடந்த 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரங்கீலாவின் குடும்பத்தினர் சென்னையில் பணியாற்றும் முகமது அலியை ஆட்களை வைத்து கடத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும், மீட்கப்பட்ட நபரையும் தரமணி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.