அதிக அளவில் செக் மோசடி நடைபெறும் மாநிலங்களில் இது தொடர்பான வழக்கு விசாரணையை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட விரைவு நீதிமன்றங்களை அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
செக் மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணையின் பொழுது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மற்றும் அனைத்து மாநில உயர் நீதிமன்ற பதிவாளர் களுக்கும் பதிலளிக்க நோட்டீசானது பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற பொழுது நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் சித்ரா மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் செக் பவுன்ஸ் உள்ளிட்ட செக் மோசடி வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதாகவும் இதனை தீர்த்து வைப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம் என யோசனை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, குறிப்பிட்ட இந்த 5 மாநிலங்களில் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட விரைவு நீதிமன்றங்களை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கான காலக்கெடுவை வழங்கிய நீதிபதிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த நீதிமன்றங்கள் இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
உச்சநீதிமன்ற பதிவாளர் இந்த தீர்ப்பு தொடர்பான விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட 5 மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.