ஒரு மணி நேரத்தில் 3 பெண்களிடம் 15 சவரன் நகை தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு CHB காலனி பகுதியில் வசித்து வருபவர் ராணி. இவர் அந்தப் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு விளக்கேற்ற மாலை நான்கு மணிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தும், முகத்தை மூடியும் இருவர் பைக்கில் வந்துள்ளனர். இதில் முகத்தை மூடியபடி வந்த நபர் ராணியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற போது அருகிலிருந்த சந்தியா என்பவர் தடுத்துள்ளார். அப்போது சத்தியாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் சங்கிலியை இழுத்த போது பாதி சங்கிலி திருடன் வசம் சென்றுவிட்டது.
இதனைதொடர்ந்து வாலரைகேட் ஹவுசிங்போர்டு பகுதியில் வசந்தி என்பவர் வீட்டில் காம்பவுண்டுக்குள் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து முகமூடி நபர்கள் அவர் கழுத்தில் இருந்த 7 சவரன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். இதனையடுத்து பரமத்தி சாலையில் சென்ற திருடர்கள் பனங்காடு என்ற பகுதியில் பால் விற்பனைக்கு சென்று கொண்டிருந்த முத்துபிரியா என்ற பெண்னின் ஏழு சவரன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற சங்கிலி பறிப்பால் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு நகர போலீசாரும் திருச்செங்கோடு புறநகர போலீசாரும் சங்கிலி பறிப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணையில் அவர்கள் வடஇந்திய இளைஞர்கள் என்று தெரிய வந்துள்ளது.