மகளின் திருமணச்செலவு காரணமாக கடனில் சிக்கிய மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்கேபி நகரைச்சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், தனது முதல் மாத சம்பள பணத்தை ஏடிஎம்மில் எடுக்கச்சென்றுள்ளார். முதல் மாத சம்பளம் என்பதால் ஒருவித பரபரப்புடன் காணப்பட்ட அந்த பெண்ணிற்கு அங்கிருந்த நபர் ஒருவர் உதவி செய்துள்ளார். சிறிது நேரத்தில் தனது வங்கிக்கணக்கில் இருந்து மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிட்ட குறுஞ்செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போன அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபோல பல புகார்கள், எம்கேபிநகர் காவல்நிலைய வட்டாரத்தில் வந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள 50 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய நபரை கண்டுபிடித்தனர். அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த அடையாளங்களை கொண்டு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரபு என்பவரை பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின.
ஆவடி டேங்க் தொழிற்சாலையில் பணிபுரியும் பிரபு, கடந்த சில மாதங்களாகவே ஏடிஎம்மிற்கு வரும் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவி செய்வது போல கார்டை வாங்கி பணத்தை எடுத்து கொடுத்த பிறகு வேறு ஏடிஎம் கார்டை மாற்றிக்கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த கடவு எண்ணை பயன்படுத்தி மொத்த தொகையையும் எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் பிரபுவிடம் இருந்து 271 டெபிட் கார்டுகளை காவல்துறையினர் பறிமுதல்செய்தனர்.
மத்திய அரசு ஊழியராக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் பிரபு, தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததற்காக 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளார். சம்பளத்தில் பெரும்பகுதி வட்டிக்கு போனதோடு, கடனை அடைக்க முடியாததால் இதுபோன்று கொள்ளையடிக்க துவங்கியதாகவும், கொள்ளையடித்த பணத்தை வட்டி கட்ட பயன்படுத்தியதாகவும் பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பிரபு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.