கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவது குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, டெல்லி, மும்பை, கர்நாடகா, ஒடிசா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தியதை உறுதி செய்திருக்கிறது. மேலும், சீன நிறுவனம் ஒன்று, மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணியை மேற்கொண்டதாகவும், அந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டதால் அதிகளவில் சீன நாட்டு பிரஜைகளை இங்கு அழைத்துவந்து பணிபுரியவைக்க அனுமதி கேட்டதாகவும், அளவிற்கு அதிகமான நபர்களுக்கு அனுமதி பெற சென்னையைச் சேர்ந்த ஒரு நபர்மூலம் பேரம் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி ரூ.50 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டு 263 சீன நபர்களுக்கு விசாக்களை முறைகேடாக பெற்றதாக சிபிஐ அந்த புகார் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக எப்படி அனுமதி பெறப்பட்டது என்பதை அறியவும் இந்த சோதனை நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த முக்கிய தனிநபர் ஒருவர் பினாமி மூலமாக லஞ்சத்தை பெற்றிருக்கிறார் என்பதே முக்கிய குற்றச்சாட்டாக சிபிஐ முன்வைத்திருக்கிறது.
மன் மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ப.சிதம்பரம் நிதியமைச்சராகவும், சில காலம் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில், உள்துறை அமைச்சகம் பற்றி சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.