ஆன்லைனில் கடன் தருவதாக பார்வையற்றவரிடம் பண மோசடி! டெல்லியைச் சேர்ந்த 2 தமிழ் பெண்கள் கைது

ஆன்லைனில் கடன் தருவதாக பார்வையற்றவரிடம் பண மோசடி! டெல்லியைச் சேர்ந்த 2 தமிழ் பெண்கள் கைது
ஆன்லைனில் கடன் தருவதாக பார்வையற்றவரிடம் பண மோசடி! டெல்லியைச் சேர்ந்த 2 தமிழ் பெண்கள் கைது
Published on

ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி பணமோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த இரண்டு தமிழக பெண்கள் உட்பட 3 நபர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் A.D.சரவணன். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரிடம் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர்கள் “சௌத் இந்தியன் பைனான்ஸ் லிமிடெட்” நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தங்கள் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு இருப்பதாகவும், மாற்றுத்திறனாளி என்பதால் வருடத்திற்கு 1% குறைந்த வட்டியில் கடன்தொகை தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளனர். பல்வேறு காரணங்களைக்கூறி பலமுறை பணத்தை டெபாசிட் செய்யச்சொல்லி சரவணனிடமிருந்து பணத்தை பெற்றுள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிய சரவணன் பல தவணைகளாக மொத்தம் ரூ.3,04,500/-ஐ அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன்பின் மேற்படி நபர்களை தொடர்பு கொண்டபோது அவர்களது செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக சரவணன் கடந்த 2021ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைதுசெய்ய ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் செல்போன் எண்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் டெல்லியைச் சேர்ந்த தமிழக பெண்கள் சாந்தி, வசந்தி, முனிஷ்சர்மா ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து விசாரணை செய்ததில் A.D.சரவணனை போன்று பலரை ஏமாற்றியது தெரியவந்தது.

பிறகு அவர்கள் மூவரையும் இன்று கைதுசெய்து அவர்களிடம் இருந்து ரூ.3,04,500 மீட்கப்பட்டது. இதற்கு பெரும் உதவியாக இருந்த ஆணையாளர் S.பிரபாகரன். காவல் உதவி ஆணையாளர் முத்துகுமார், காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் டெல்லி சென்று தீவிர புலன் விசாரணை செய்து மீட்டு கொடுத்த நிலையில், அவர்களுக்கு ஆணையர் பாராட்டு தெரிவித்தார். ஏமாந்த பணத்தை மீட்டு கொடுக்க உதவியாக இருந்த ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களை மாற்றுத்திறனாளி சரவணன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக்கூறி முன்பின் தெரியாத நபர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு சொல்லும் வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் ஏமாந்து பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் சென்னை பெருநகர காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com