விசாரணைக்கு சென்ற பெண்ணை வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கை, பெண் டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் மேலதிருப்பன்துருத்தியைச் சேர்ந்த மூகாம்பிகை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'என் நண்பர் ராஜ்கண்ணு என்பவர் ஆந்திர மாநிலம் காளகஸ்தி அருகே கடந்த செப்.22-ல் நாமக்கல் மாவட்ட வேப்படை போலீசாரால் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இவர் கைதாவதற்கு முன் நான் அவரது செல்போனில் பேசியதால், சிறப்பு பிரிவு போலீசார் வீட்டிற்கு வந்து என்னிடம் விசாரித்தனர். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு விசாரணைக்கு நேரில் வரவேண்டுமென கூறினர்.
பின்னர் காரில் என் வீட்டிற்கு வந்த நாமக்கல் மாவட்ட வேப்படை சிறப்பு போலீசார், என்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். நான் மறுத்ததால், என்னை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றிச் சென்றனர். காரில் தலையின் பின்புறம் துப்பாக்கியை வைத்து சத்தமிடக் கூடாது என மிரட்டினர்.
பின்னர் போலீசார் மது அருந்தினர், அதன்பின் எனக்கு மாத்திரைகளைக் கொடுத்து கட்டாயப்படுத்தி சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக என்னை எங்கோ அடைத்து வைத்து, இரவு முழுவதும் போலீசார் மாறிமாறி வன்கொடுமை செய்தனர். மறுநாள் என்னை தஞ்சை சிஆர்சி பஸ்ஸ்டாண்ட் அருகே இறக்கிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து வெளியில் கூறினால் குடும்பத்தினர் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டினர். இதனால் நான் மனரீதியாக உடல் ரீதியாகவும் கடுமையாக பாதித்துள்ளேன். இது குறித்து தஞ்சை காவல் துறையிடம் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. பின்னர் தஞ்சை எஸ்பியிடம் புகார் அளித்தேன். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது வழக்கை சிபிசிஐடி பெண் டிஎஸ்பி மூலம் விசாரிக்கவும், உரிய பாதுகாப்பு வழங்கவும், மறுவாழ்வு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தாரணி, இந்த பெண் அளித்துள்ள புகார் போலீசாருக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த புகார் என்பதால் தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் உடனடியாக ஒரு பெண் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.