TTF VASAN | விபத்தில் முடிந்த வீலிங்.. யூடியூபர் மீது பாய்ந்தது வழக்கு! எப்படி இருக்கிறார் வாசன்?
காஞ்சிபுரம் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டபோது TTF வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களுக்கு மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன், சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து சாலை விதிகளை மீறிவந்த நிலையில், தற்போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். அவர்மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
சம்பவத்தின்படி TTF வாசன் சென்னையிருந்து மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவருடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது ஒருவருக்கொருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிவேகமாக வாகனத்தினை இயக்கி ஸ்டண்ட் என்று சொல்லப்படக்கூடிய வீலிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் செல்லும் வழிகளிலெல்லாம் தனது யூட்யூப், இன்ஸ்டா FOLLOWERS-களை வரவழைக்கும் நோக்கத்தில், தான் வரும் இடங்கள் குறித்து தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இளைஞர்கள், சிறுவர்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் TTF வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி சென்றபோதுதான், காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலைதடுமாறியுள்ளது. இதில் பைக்கானது இரண்டு மூன்று முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் TTF வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு, அவர் காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு வாசனின் கைக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது. மேலும் கால் உட்பட உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனையெடுத்து தான் சென்னையில் சிகிச்சை பெற்று கொள்ளவதாக வாசன் கூறிய நிலையில் அவரது நண்பர்கள் அவரை சென்னை அழைத்து சென்றிருக்கின்றனர்.
இந்த நிலையில் TTF வாசன் மீது பாலுசெட்டி சத்திர காவல்துறை 279 IPC (மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது) மற்றும் 338 IPC (பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது) உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.