சிக்கமகளூரு வனப்பகுதியில் சாலையில் குட்டியுடன் நின்ற காட்டு யானைகளை ஜேசிபி எந்திரம் மூலம் விரட்டி அட்டகாசம் செய்த ஜேசிபி ஓட்டுநர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு வனப்பகுதியில் சாலை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக தனியார் நபர்களுக்கு டெண்டர் விடப்பட்டதால் ஜேசிபியை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் சாலையை மேம்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனிகேபைலு காட்டுப்பகுதியில் சாலை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் அந்தப் பகுதியில் குட்டியுடன் நின்ற இரண்டு காட்டு யானைகளை ஜேசிபி ஏந்திரம் வைத்து வேண்டுமென்றே விரட்டியிருக்கிறார்.
அதனால் தனது குட்டியை காக்க யானை ஜேசிபி ஏந்திரம் மீது பாய்ந்தாலும் ஓட்டுநர் விடாமல் யானைகளை விரட்டும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததால் வனத்துறையினர் ஜேசிபி ஓட்டுநர் உட்பட மூன்றுபேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிரணை மேற்கொண்டு வருகின்றனர்.