கோவை அருகே அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு மாணவனை கழிவறையை தூய்மை செய்யவைத்த புகாரில், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் செம்மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும், பட்டியல் இனத்தை சேர்ந்த 8 வயது மாணவரை கடந்த மார்ச் 29ஆம் தேதி, பள்ளி ஆசிரியர்கள் கழிவறையை தூய்மை செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக்குறித்து மாணவரின் தாய் சைலஜா, பள்ளி ஆசிரியர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாணவரின் தாய் ஷைலஜா, இதுகுறித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாவட்ட ஏடிஎஸ்பி, பேரூர் சரக டிஎஸ்பி, ஆலாந்துறை காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு நேரில் சென்று, மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவரை கழிவறையை தூய்மை செய்யவைத்ததுடன், மாணவரின் தாயை அவ மதிரியாதையாக பேசிய புகாரில், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியை தங்க மாரியம்மாள் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.