(கோப்பு புகைப்படம்)
பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் செனாய் நகரை சேர்ந்த சக்திவேல், அரசு மாநகர பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதேபோல் சேத்துபட்டு பகுதியை சேர்ந்த கண்ணன் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இருவரும் 15ஜி பேருந்தில் பிராட்வேயில் இருந்து அரும்பாக்கம் எம்எம்டிஏவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றனர். அப்போது பச்சையப்பன் கல்லூரி அருகே வரும்போது மாணவர்கள் கூட்டமாக பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்களிடம் நடத்துநர் கண்ணன் பஸ்பாஸ் இல்லாதவர்கள் டிக்கெட் எடுக்ககுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நடத்துநர் கேட்டு கொண்டதன் பேரில் ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் நடத்துநர் கண்ணன் மீண்டும் மாணவர்களிடம் டிக்கெட் கேட்டதால் ஆத்திரமடைந்த இரு மாணவர்கள் ஓட்டுநர், நடத்துநர் இருவரையும் கையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ஓட்டுநர் இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள் யார் என்பதனை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.