அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மற்றும் பாடலாசிரியர் சினேகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், ஆகியோர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இந்த புகார் தொடர்பாக இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் சினேகம் பவுண்டேஷன் பெயரில், நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் தெரிவித்ததை கண்டிக்கும் விதமாக பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் சினேகன். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Ipc 420,465 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.