இரிடியம் வாங்க வந்த நபரிடம் போலீசார் போல் நடித்து 30 லட்சம் கொள்ளை-விசாரணையில் பகீர் தகவல்

இரிடியம் வாங்க வந்த நபரிடம் போலீசார் போல் நடித்து 30 லட்சம் கொள்ளை-விசாரணையில் பகீர் தகவல்
இரிடியம் வாங்க வந்த நபரிடம் போலீசார் போல் நடித்து 30 லட்சம் கொள்ளை-விசாரணையில் பகீர் தகவல்
Published on

கோவையில் இரிடியம் வாங்க வந்த நபரிடம் 30 லட்சம் ரூபாயை காவல்துறையினர் எனக் கூறி கொள்ளையடித்துச் சென்ற கார் ஓட்டுநர் உட்பட மூவரை கைதுசெய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 7.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கொள்ளையர்கள் விடுதிக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரை கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் போனில் தொடர்புகொண்டு தன்னிடம் விலை மதிப்புமிக்க இரிடியம் இருப்பதாகவும்,  இந்த இரிடியத்தை வாங்க 30 லட்சத்துடன் கோவை வருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய மனோகரன் 30 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது கார் ஓட்டுநர் வேலு என்பவருடன் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கோவை வந்து சிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். மாலை 7 மணியளவில் மனோகரன் தங்கியிருந்த அறைக்கு வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி மனோகரனை மிரட்டியதோடு, அவரிடமிருந்து 30 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கின்றனர்.

நிலைமையை சுதாரித்துக்கொண்ட மனோகரன், இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் ஓட்டுநர் வேலுவிடம் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசிய வேலு, பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பணத்துடன் மனோகரன் கோவை வருவதை அறிந்துகொண்ட வேலு, தனது நண்பர்களான தேனியைச் சேர்ந்த நிர்மல்செல்வன் மற்றும் வினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அன்று மாலை வேலு, வெளியே சென்றபோது, மனோகரன் தனியாக இருக்கும் தகவலை கூட்டாளிகளுக்கு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அங்கு வந்த இருவரும் மனோகரனை மிரட்டி, பணத்தை பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. தற்போது வேலு உட்பட மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 7.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூவரும் கொள்ளையடித்த பணத்தில் ஒரு தொகையை, கோவையை சேர்ந்த இருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தொடர்ந்து, மனோகரனை இரிடியம் இருப்பதாகக் கூறி கோவை வரவழைத்தது யார்? மீத பணம் யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொள்ளை நடந்த அன்று கொள்ளையர்கள் இருவரும், விடுதிக்கு வந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com