அம்பத்தூரில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 5 பேரை கைது செய்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும் போலீசாருக்கு புகார் வந்தது. இந்நிலையில் கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களை பற்றிய ரகசிய தகவல் அம்பத்தூர் போலீசாருக்கு கிடைத்தது.
இதனையடுத்து நேற்றிரவு அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான போலீசார் அம்பத்தூரில் உள்ள கள்ளிக்குப்பம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு சோதனை செய்தபோது சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த வீட்டில் இருந்த ஐந்து பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அரக்கோணத்தைச் சேர்ந்த நவீன் (எ) சியாம் சுந்தர் (22), திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான வீரா (எ) வீரப்பன் (26), அஜய் (20) மற்றும் கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (28) மற்றும் கோகுல் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் அரக்கோணத்தை பூர்வீகமாகக் கொண்ட நவீன் (எ) சியாம் சுந்தர் மீது அரக்கோணத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பது தெரியவந்தது. இவர் கடந்த ஒரு மாதங்களாக கள்ளிகுப்பம் சோதனை சாவடி அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை சிறிய பொட்டலமாக மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் விற்றது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.