சென்னை மதுரவாயலில் கொள்ளை அடிக்கச் சென்ற வீட்டில் திருடவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் மொட்டை மாடியிலேயே தூங்கிவிட்ட பொறியியல் பட்டதாரி பிடிபட்டுள்ளார்.
அடையாளம்பட்டைச் சேர்ந்த பிரபாகரன், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை இவரது வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால் பிளம்பரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்ற போது அங்கு ஒரு நபர் பதுங்கி இருப்பதைக் கண்டு யார் என்று கேட்ட போது அந்த நபர் வீட்டின் மாடியில் இருந்து வேகமாக இறங்கி கீழே ஓடினார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் அந்த நபரால் தப்பித்து செல்ல முடியவில்லை. பின்னர் அந்த நபர் கையில் ஸ்குருடைவர் வைத்து மிரட்டியுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் பிரபாகர் ப்ளம்மர் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தார். அப்போது கொள்ளையன் நான் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும் வங்கி கடன், கடன் பிரச்சனை காரணமாக கொள்ளை அடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
பிறகு பிடிபட்ட நபரை மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் கொளத்தூரை சேர்ந்த முத்தழகன், என்பதும் ஆன்லைனில் உணவுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக இந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் போது இவ்வீடு தனியாக இருப்பதை கண்டறிந்து கொள்ளை அடிக்க முடிவு செய்ததாகவும் காவல்துறையிடம் கூறினார்.
நேற்று இரவு போதையில் இருசக்கர வாகனத்தை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு இந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது எகிறி குதித்து உள்ளே புகுந்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் மேலே உள்ள வீட்டின் கதவை உடைக்க முடியாததால், கதவை திறந்த பிறகு கொள்ளை அடிக்கலாம் என மாடியிலேயே போதையில் தூங்கி விட்டார்.
பின்னர் பொழுது விடிந்ததும் மேலிருந்து கீழே வர முடியாததால், மாடியிலேயே மாலை வரை கொளுத்தும் வெயிலில் உணவு ஏதும் உண்ணாமல் பதுங்கி இருந்துள்ளார் முத்தழகன். இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து பிடிபட்ட நபரை மதுரவாயல் போலிசார் வழக்குப் பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.