முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி சர்ச்சைக்குள்ளான 'புல்லி பாய்' செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய், போலீஸ் விசாரணையின் போது தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், தான் சரி என்று நினைத்ததைச் செய்ததாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போபாலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு பிடெக் படிக்கும் 21 வயது மாணவர் நீரஜ் பிஷ்னோய், அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் இருந்து புல்லிபாய் செயலியை உருவாக்கி சர்ச்சையான வழக்கில் டெல்லி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான மென்பொருள் பகிர்வு தளமான கிட்ஹப்பில் ஹோஸ்ட் செய்யப்பட்ட 'புல்லிபாய்' செயலியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட சாதனத்தையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், இந்த செயலி உண்மையில் நவம்பரில் உருவாக்கப்பட்டது என்றும், டிசம்பர் 31 ஆம் தேதி பொதுவெளியில் பரவியது என்றும், அதன்பின் மும்பை காவல்துறையை கேலி செய்ய பயன்படுத்திய @giyu44 டிவிட்டர் பக்கத்தையும் பிஷ்னோய் உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவர் தனது ட்வீட்டில் மும்பை காவல்துறையை "ஸ்லம்பாய் போலீஸ்" என்று குறிப்பிட்டார். மேலும், தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், தான் சரி என்று நினைத்ததைச் செய்ததாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புல்லிபாய் செயலியை உருவாக்கியது தொடர்பாக 19 வயதான ஸ்வேதா சிங், விஷால் குமார் ஜா மற்றும் மயங்க் ராவல் ஆகியோர் கைது செய்யப்பட பிறகு அந்த டிவிட்டர் பக்கத்தில் "தவறான நபரை கைது செய்துள்ளீர்கள், ஸ்லம்பாய் போலீஸ்... நான் புல்லிபாய் ஆப்-ஐ உருவாக்கியவன்.. நீங்கள் கைது செய்த இரண்டு அப்பாவிகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர்களை விரைவில் விடுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
முஸ்லீம் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஆன்லைனில் இழிவாகக் குறிவைத்து அவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட புல்லிபாய் செயலி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.