உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் கடந்த 14-ஆம் தேதி, 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
டெல்லியில் சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கு பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், ரிச்சா சதா மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என ரிச்சா குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.
அதில், ‘’பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள். வருடந்தோறும் அதிகரித்து வரும் இந்த பாலியல் கொலைகளுக்கு தீர்வுதான் என்ன? மிகவும் வருத்தமான, வெட்கக்கேடான நாள் இது. நமது மகள்களில் ஒருவரைக் காப்பாற்ற தவறிவிட்டோம்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரிச்சா தனது ட்வீட்டில், ‘’ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும். அனைவருக்கும் மரியாதை கிடைக்கவேண்டும். குற்றவாளிகளை தண்டியுங்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு ட்விட்டர் பயனாளி ஹிந்தியில், ‘’ரியா சக்ரவர்த்தி மற்றும் தீபிகா படுகோனுக்கு விரைவு செய்தியில் முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்கள் இந்த ஹத்ராஸ் பெண்ணுக்கு அதேபோல் முக்கியத்துவம் கொடுப்பார்களா?’’ எனக் கேட்டிருந்தார். அதற்கு நடிகை ஸ்வரா பாஸ்கர் ‘’இல்லை’’ என பதிலளித்திருக்கிறார்.
யாமி கௌதம், ‘’என்னுடைய வருத்தம், கோபம் மற்றும் வெறுப்பை தெரிவிப்பதற்கு முன்பு என்னுடைய எண்ணங்களை ஒருநிலை படுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. 2020லும் நிறைய நிர்பயாக்கள் தங்கள் உயிரை விட்டிருக்கின்றனர். அவர்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் வலியைப் பற்றி சிந்திக்கக்கூட முடியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.