மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கித் தருவதாக கூறி 77 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
திருப்புத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர், ஊராட்சி மன்ற தலைவராகவும், கடந்த 10 வருடமாக அதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பாரதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் எம்எல்ஏ சீட் கேட்டு முயற்சி செய்தபோது கிடைக்காத நிலையில். வேலூர் மாவட்டத்தில் ஹோட்டல் நடத்திவரும் அதிமுகவைச் சேர்ந்த பாலச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலமாக புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் அறிமுகமானதாகவும், அப்போது அவர்கள் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒரு கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர்.
இதை ஒப்புக்கொண்ட பாரதி, 34 லட்சம் ரூபாயை சென்னை ஹோட்டலில் வைத்து புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரிடம் கொடுத்ததாகவும், இதற்கிடையே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை வாங்கித் தரப்போவதாக ஐஏஎஸ் சசிகுமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்து அவரை டெல்லியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சந்தித்து ரூ.43 லட்சம் என மொத்தம் 77 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து பல மாதங்களாக பதவி கிடைக்காமல் இழுத்தடித்து வந்ததால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது பணத்தை தர முடியாது என புவனேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சசிகுமார் போலி ஐ.ஏ.எஸ் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சசிகுமார், ரயில்வே மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பணத்தைப் பெற்று மோசடி செய்த தம்பதி புவனேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.