பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வருண்குமார்( 27). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த உமையாள்பரணஞ்சேரி பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஒரகடம் சிப்காடில் உள்ள தனியார் தொழிற்சலையில் வேலை செய்து வருவதோடு, ஆன்லைன் மூலம் செல்போன்கள் வாங்கி விற்பனை செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் வருண் குமாருடன், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் (25) , கிருஷ்ணகுமார் (16), ராகுல் குமார் (19) உள்ளிட்ட நான்கு பேரும் ஒரே அறையில் தங்கி வந்துள்ளனர்.
வருண் குமார், ஓம்பிரகாஷ் ஆகியோர் வேலைக்கு சென்ற சமயத்தில், அறையில் தங்கியிருந்த ராகுல்குமார், கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் அறையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்களை அள்ளிக்கொண்டு தப்பியுள்ளனர். இதையடுத்து வருண்குமார், ஓம்பிரகாஷ் பணி முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, அறையில் இருந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து இருவரும் ஒரகடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ராகுல் குமார், கிருஷ்ணகுமார் இருவரும் சூட்கேசில் செல்போன்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. மேலும் வருண் குமாருடனே இருந்த ஓம்பிரகாஷ் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்து கிடுக்கு பிடி விசாரணை செய்ததில், ஓம்பிரகாஷ் பீகாரில் இருந்து தனது நண்பர்களான ராகுல் குமார், கிருஷ்ணகுமார் ஆகியோரை வரவழைத்து வருண் குமார் அறையில் இருந்த செல்போன்களை திருடச் சொன்னது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் ரயில் மூலம் பீகாருக்கு தப்பிச் சென்ற இருவரையும் நாக்பூர் என்ற இடத்தில் செல்போன் சிக்னலை வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். 10 லட்சம் மதிப்புள்ள செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.